பாடல் 392 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் ...... தனதான |
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் கடுத்தாசை பற்றித் ...... தளராதே அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் டறப்பே தகப்பட் ...... டழியாதே கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் கலிச்சா கரத்திற் ...... பிறவாதே கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட் டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச் செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற் றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே. |
அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு இயைந்த ஆசை கொண்டு சோர்வு அடையாமல், வலிமை வாய்ந்த யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) உரிமையை மிதித்திட்டு, மிகவும் மனம் வேறு பாடு அடைந்து நான் அழியாமலும், பிறவிக்கு காரணமான செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு, துன்பக் கடலில் நான் பிறவாமலும், நீ என் மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்து, கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக. ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய மனதில் உறைபவனே, வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை வைத்து, மறைந்து ஓடின வெற்றி பொருந்திய குமரேசனே, ஆணவம் கொண்டு, கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே, நிலை பெற்ற பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 392 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தா, தனத்தத், வைத்து, உனது, நான், வாய்ந்த, பெருமாளே, கொண்டு