பாடல் 385 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
உருகு மாமெழு காகவு மேமயல் பெருகு மாசையு ளாகிய பேர்வரி லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார் உடைகொள் மேகலை யால்முலை மூடியும் நெகிழ நாடிய தோதக மாடியு முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங் கரவ தாமன மாதர்கள் நீள்வலை கலக வாரியில் வீழடி யேநெறி கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத கசட மூடனை யாளவு மேயருள் கருணை வாரிதி யேயிரு நாயகி கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே சுருதி மாமொழி வேதியன் வானவர் பரவு கேசனை யாயுத பாணிநல் துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே தொலைவி லாவசு ரேசர்க ளானவர் துகள தாகவு மேயெதி ராடிடு சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே அருணர் கோடியி னாரொளி வீசிய தருண வாண்முக மேனிய னேயர னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே அணிபொன் மேருயர் கோபுர மாமதி லதிரு மாரண வாரண வீதியு ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே. |
உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன், நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலி பெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே.
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்: சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 385 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சிறந்த, பெரிய, மயில், மேடையில், கொண்ட, திருமாலின், வீசும், மேல், அழகிய, மாலையை, நாயகி, பெருமாளே, மூடியும், நல்ல, மேனிய