பாடல் 379 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான |
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று மருவுமென தாவி சற்று ...... மழியாதே மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த கடியமல ராத ரித்த ...... கழல்வீரா அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. |
தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வடதுருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர்க்கணை, ஊர்ப் பெண்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 379 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீங்காத, தனதனன, தத்த, மீது, மன்மதன், உடைய, வரும், உடையவள், வெற்றி, விட்ட, மீதெ, வைத்த, பெருமாளே, மேல்