பாடல் 378 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸாரமதி ;
தாளம் - கண்டசாபு
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக் கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற் கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக் கருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே. |
பருத்ததான கைக்கயிறாகிய பாசக்கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து, பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு, தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே, மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும், அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ? கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின் நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு* ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன், கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன், தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம் அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு, தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 378 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தானனத், தனதனத், என்றும், நல்ல, கொண்ட, வீசும், பெறுவேனோ, பெருமாளே, இந்தப்