பாடல் 377 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட் களவினிற் காசினுக் ...... குறவாலுற் றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற் றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர் ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப் புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச் செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற் றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே. |
கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ? வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 377 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், வாய்ந்த, தானனத், கொண்ட, வலிமை, அழகிய, மகிழ்ச்சியுடன், பெருமாளே, செய்யும், போன்று, பொருள்