பாடல் 376 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - சிவரஞ்சனி
; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் ...... பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் கதறிடப் பாடையிற் ...... றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் ...... தரவேணும் அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத் தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற் புனமறப் பாவையைப் ...... புணர்வோனே பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப் பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே. |
கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும், கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும், என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும், புதல்வர் அப்பா எனக் கதறி அழவும், பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும், பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும், யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில் என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க. வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க, மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே, சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே, மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில் தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே, தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும் போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 376 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழவும், தனதனத், தானனத், பெருமாளே, என்றும்