பாடல் 373 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் முலைக ளளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் மருவி யமளியி னலமிடு கலவியர் மனது திரவிய மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன் அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே கருதி யிருபது கரமுடி யொருபது கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் கவச அநுமனொ டெழுபது கவிவிழ அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா தருண மணியவை பலபல செருகிய தலையள் துகிலிடை யழகிய குறமகள் தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே. |
நறுமணம் நிறைந்த கூந்தலை முடித்துள்ள தந்திரசாலிகள். மார்பகங்களை அளவிட்டுக் காட்டும் மேலாடை அணிந்த வெளி வேஷதாரிகள். அவரவர்களின் மூல தனத்தையும் குணாதிசயங்களையும் அளந்திடவல்ல திருடிகள். முழுமையும் நீல நிறம் கொண்ட புனுகு சட்டம், அகில் இவையிரண்டும் குழைக்கப்பட்ட மணம் கொண்ட உருவ அழகியர். நன்கு பழுத்த (கொவ்வைக்) கனியின் தன்மையைப் பெற்றுள்ள வாயிதழை உடையவர்கள். கூர்மை கொண்ட வேலைப் போன்ற கண் பார்வையை வீசும் இழிந்தவர்கள். காமப் பற்று பொருந்த படுக்கையில் உடலுக்கு இன்பம் தரும் புணர்ச்சியினர் தங்கள் மனதை தாம் பெற்ற பொருளின் அளவுக்கு ஏற்ப அளந்து கொடுப்பவர்கள். பேசும் பேச்சில ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை புகுத்துபவர். இத்தகைய பொது மகளிரின் வழியில் நான் மருள் கொண்ட அறிவில்லாதவன். தலை கால் தெரியாதவன். அத்தகைய எனக்கு திருவண்ணாமலையில்* கருணையுடன் நீ அருள் செய்த மெளன உபதேசத்தையும் நின் இரண்டு பெருமை மிக்க திருவடிகளையும் நான் மறக்க மாட்டேன். நன்கு ஆராய்ந்து பார்த்து, இருபது கரங்களும், ஒரு பத்து தலைகளும் பொன்னாலான கி¡£டங்களை அணிந்த ராவணன் ஆட்சி செய்ததும், பழமையானதும், காவல் கொண்டதுமான அற்புத நகரமாம் இலங்கை தீப்பிடிக்க, கவசம் போல் விளங்கிய அனுமனோடு எழுபது ஆயிரம் குரங்குகள் (மலைகளைப்) போட்டுக் கட்டிய அணையின் வழியாக அலைகடலை அடக்கிக் கடந்து, எதிர்த்துப் போர்செய்த போர்க்களத்தில் ஒப்பற்ற அம்பைச் செலுத்தும் வலிமை வாய்ந்த ராமனாம் திருமாலின் மருகனே, போராடிய அசுரர்கள் தங்கள் படையுடன் தமது வலிமை எல்லாம் தொலைந்தழிய, நிலை பெற்றிருந்த கிரவுஞ்ச மலையையும் இடித்துத் தள்ளி, யமதர்ம லோகத்துக்கு அனைவரையும் குடியேறும்படி உதவிய அழகு பொருந்திய மயில் வீரனே, புதிய மணிகளைப் பலவாறு செருகியுள்ள தலையை உடையவள், ஆடை இடையில் அழகாக அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பினை அன்புடன் தழுவிய பெருமாளே.
* இது அருணகிரியார் திருஅருணையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டதைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 373 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, நான், வலிமை, தங்கள், நன்கு, அணிந்த, தழுவிய, பெருமாளே