பாடல் 372 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென முதிய மதியது முகமென நுதலிணை முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா முளரி தனின்முகு ளிதமலர் முலையென முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் பகலு மிரவினு மிகமன மருள்கொடு பதியி லவர்வடி வுளதழ கெனவொரு பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட விகட முடனடை பயில்மயில் மிசைவரு பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே புகல வரியது பொருளிது எனவொரு புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் புரமு மெரியெழ நகையது புரிபவர் புனலும் வளர்மதி புனைசடை யினரவர் புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே அகில கலைகளு மறநெறி முறைமையு மகில மொழிதரு புலவரு முலகினி லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே அறுவர் முலையுணு மறுமுக னிவனென அரிய நடமிடு மடியவ ரடிதொழ அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே. |
மேகத்தைப் பகைத்துப் போராடும் முற்றின இருளுமே கூந்தல் என்றும், பூரண சந்திரனே முகம் என்றும், புருவம் இரண்டும் பகைவர்களால் கட்டப்பட்ட வில் என்றும், விரைந்து பாயும் அம்பு கண் என்றும், மூப்பில்லாத தாமரையின் அரும்பு நிலை மலர் மார்பு எனவும், பற்களையும் இரண்டு குண்டலங்களையும் பேச்சையும் உவமை சொல்லுதற்கு அரிதானதோர் மாதர்களின் செயலாற்றும் கருவிகள் எனவும் வர்ணித்துக் கூறி, பகலும் இரவும் மிக்க மன மருட்சியுடன் பொது மகளிரின் வடிவில் அழகு இருப்பிடம் கொண்டிருக்கின்றது என்று, சற்றும் குறைவிலா வகையில் அவர்கள் அன்பு கொள்ளுமாறு இன்ப வார்த்தைகளை அவர்களிடம் சொல்லித் திரியாமல், பகையுடன் வந்து எதிர்த்துப் போர் செய்யும் அசுரர்கள் துகைக்கப்பட்டு அழிய, நீ நடனம் செய்யும் மயிலின் மேல் உலவி வரும் காட்சியை தினமும் நினைப்பாயாக என்று வரம் தர வேண்டும். எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததான பொருள் இதுதான் என்றும், ஒரு புதிய வகையில் கற்பனை செய்ய முடியாததான முதன்மையானது என்றும், ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் தவ நிலையில் உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து கூறிவர, திரி புரம் எரியுண்ணச் சிரித்தவர், கங்கையையும் பிறையையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய சிவபெருமான் பூமியில் (சுவாமி மலையில்) உன்னை வழிபட்டு நிற்க, அவருக்கு ரகசியப் பொருளை ஆர்வத்துடன உபதேசித்தவனே, எல்லா கலைகளும் தரும நெறியைக் கூறும் நூல்கள் எல்லாவற்றையும் மொழிய வல்ல புலவர்களும், உலகிலுள்ள அறிஞர்களும், தவ நிலையைச் சார்ந்து முயல்பவர்களும், இயற்றமிழாலும், இசைத் தமிழாலும், ஆறு கார்த்திகை மாதர்களின் முலைப் பாலை உண்ணும் ஆறுமுக சுவாமி இவன்தான் என்று தியானித்துக் கூறி அருமையான நடனம் இடும் அடியவர்கள் உனது திருவடியைத் தொழுது நிற்க, திருவண்ணாமலை என்னும் ஊரில் அழகுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 372 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்றும், நடனம், செய்யும், முடியாததான, நிற்க, சுவாமி, வகையில், மாதர்களின், மொழிய, பொருள், பெருமாளே, எனவும், கூறி