பாடல் 368 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
அருவ மிடையென வருபவர் துவரிதழ் அமுது பருகியு முருகியு ம்ருகமத அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார அசல முலைபுள கிதமெழ அமளியில் அமளி படஅந வரதமு மவசமொ டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் தருவை நிகரிடு புலமையு மலமல முருவு மிளமையு மலமலம் விபரித சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் சலில லிபியன சனனமு மலமல மினியு னடியரொ டொருவழி படஇரு தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே உருவு கரியதொர் கணைகொடு பணிபதி யிருகு தையுமுடி தமனிய தநுவுட னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் உறுதி படுசுர ரதமிசை யடியிட நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம் உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி தெருவு நகரியு நிசிசரர் முடியொடு சடச டெனவெடி படுவன புகைவன திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய பெரும அருணையி லெழுநிலை திகழ்வன சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே. |
உருவமே இல்லாத நுண்ணிய இடை என்று கூறும்படி வந்துள்ள பெண்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய அமுதைப் பருகியும், அந்த நிலையில் உருகியும், கஸ்தூரி வாசனை உடைய கூந்தல் அசையவும், அணிந்த ஆடை விலகவும், மிகக் கனத்த மலை போன்ற மார்பு புளகிதம் கொள்ள, படுக்கையில் கோலாகலமாக எப்போதும் காம மயக்கத்தோடு தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி இன்பம் போதும் போதும். உலகில் உள்ளவர்களை கற்பக மரத்துக்கு ஒப்பீர்கள் எனப் பாடும் கவித் திறமும் போதும் போதும். ஒன்றுக்கொன்று மாறுபடுகின்ற சமயக் கொள்கைகளும் போதும் போதும். அழகிய தோற்றமும், இந்த இளமையும் போதும் போதும். வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்) முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு, சக்கரங்கள் சூரிய சந்திரர் எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும் வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே, நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள் * (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும், (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக் கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே, வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள் விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே.
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
** ஏழு நிலைகள் (குண்டலினி) - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராக்ஷம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 368 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போதும், தனதன, மலமல, அசுரர்கள், ஆகவும், கொண்ட, திரிபுரத்தில், இருந்த, நிலைகள், மூன்று, நெறு, கொண்டு, பெருமாளே, உடைய, அணிந்த, அழகிய, ஒப்பற்ற, மேல், தேர்