பாடல் 367 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள்புய முருக சரணென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் கமரில் விழவிடு மழகுடை யரிவையர் களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் கருணை யடியரொ டருணையி லொருவிசை சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தரவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில் அகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே. |
குமரனே, குருமூர்த்தியே, நற்குணங்கள் நிறைந்தவனே, அசுரர்கள் என்னும் இருளை நீக்கும் சூரியனே, சரவணபவனே, இமயமலையின் மகளுக்கு மகனே, பகீரதியின் (கங்கையின்) மகனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரனின் சிறந்த மகளான மான் போன்ற தேவயானையையும், வேடர் குலப் பெண்ணான வள்ளியையும் தழுவும் வலிமை வாய்ந்த தோள்களை உடைய முருகனே, அடைக்கலம் என்று கூறி மனம் உருகுதல் கொஞ்சமும் இல்லாத கொடுமையான வினைக்கு ஈடானவனை, வீணனை, முட்டாளை, மிகுந்த காமம் என்னும் நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகு வாய்ந்த விலைமாதர்கள், வஞ்சகமாக, (வருபவருடைய) கைப் பொருள் கொடுத்த அளவுக்குத் தகுந்தபடி இன்பம் கொடுக்கின்ற சேர்க்கை என்னும் சேற்றில் சோர்வுறும் அறிவிலியாகிய என்னை, (என் குறைகளைக் கருதாது,) அன்புடன் ஆண்டருள, கருணைக்குப் பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த, இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே. ஒலி மிக்க அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பாகங்கள் கலங்க அலைச்சல் உறவும், விஷத்தை ஆறு போலக் கக்கி உமிழும், விளக்கமான தோற்றத்தைக் கொண்ட கூட்டமான படங்களை உடைய, பாம்பு அரசனாகிய வாசுகி (கடலைக் கடையும்) நீண்ட கயிறாகவும், எல்லா உலகங்களும் நிலைபெறும்படி நிறுத்தி வைக்கப்பட்ட பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழலவும், (கடைபவர்களின்) அனேக பல திருக்கர மலர்களும் தளர்ச்சி அடைய, இனியதான அமுதத்தை ஒப்பற்ற தனி முதல்வனாக நின்று கடைந்து, தேவர்கள் பசி நீங்க உதவி செய்த கருணை வாய்ந்த மேக வண்ணன், எல்லா உலகங்களையும் பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து எண்ணுதற்கு அரியவன் (ஆகிய அத்தகைய திருமாலுக்கு) மருகனே, பாம்பை அணிகலனாகக் கொண்ட தூய்மையான சிவபெருமானும் துதிக்கும்படி, உனது குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள் ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 367 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, வாய்ந்த, என்னும், பொருள், உடைய, கொண்ட, நீண்ட, எல்லா, கருணை, மகனே, அறிவை, அருளிய, பெருமாளே, மறவேனே, அரியவன்