பாடல் 362 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் -
ரஞ்சனி; தாளம் - அங்கதாளம் - 8 - புத்தகத்தில் -6 ??
தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானந்த தான தந்தன தனதன தானந்த தான தந்தன தனதன தானந்த தான தந்தன ...... தனதான |
குருதிபு லாலென்பு தோன ரம்புகள் கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு மெமது பிரானென்று தாள்வ ணங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே. |
இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா* பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப் படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில்** ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக. ஓர் ஒப்பற்ற வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும், அசுரர்களையும், மாமரமாய் நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும் உடைபட்டுப் போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை உடைய வீரனே, சிறந்த தவ முநிவர்கள், மேலுலகவாசிகளான தேவர்கள், உனது திருவடிகளைத் தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள், இவர்களது உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே, ஆய்ந்து அறிந்த வேதத்தின் ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள் ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து, இரு திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே, பிரம தேவனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும் எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். *** வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு: நிருத்தம், ஜோதிடம், சி¨க்ஷ, வியாகரணம், கற்பம், சந்தஸ்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 362 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மார்க்கம், செய்யும், தந்தன, தனதன, தானந்த, பின்வருமாறு, வேதத்தின், ஞானம், தொழில், வழிபாடு, இடுதல், சரியை, வேள்வி, மூளை, கிருமிகள், பெருமாளே, உடல், கிரியை, தகதிமி, பூஜை