பாடல் 360 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன ...... தனதான |
கருமுகில்திர ளாகக் கூடிய இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே பரநெறியுண ராவக் காமுகர் உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே மரகதவித நேர்முத் தார்நகை குறமகளதி பாரப் பூண்முலை மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே வளைதருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் போயிரு வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா அரவணைதனி லேறிச் சீருடன் விழிதுயில்திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும் உடையதொர்மயில் வாசிச் சேவக அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே. |
கரிய மேகங்கள் திரண்டு கூடிய இருள் என்று சொல்லும்படியான வியப்பு நிறைந்து விளக்கமுற்றதும், நறு மணம் வீசுவதுமான கூந்தலை உடைய அழகை உடையவர்கள், இந்த உலகிலேயே மிகுந்த விலை கொண்ட காதணியை அணிந்தவர்கள், பூரண சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப் பதுமையைப் போன்றவர்கள், கள்ளத்தனத்துடன் கூடிய முழு மோசம் செய்பவர்கள் (ஆகிய இத்தகைய வேசியர்கள்) மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பலி கொள்ளுகின்ற ஆசைக்காரிகள், அம்பையே கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள், முகம் காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷதாரிகள், பொருள் மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வடிவழகு கொண்டுள்ள மார்பகங்களான சிகர முனைகள் என் நெஞ்சில் தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற அருளைப் புரிந்திடுக. மரகதப் பச்சை நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறப் பெண்ணான வள்ளியின் அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவனே, பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய மிக்க வல்லவனே, (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் ஏறி, சீராகக் கண் துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன், (சிவனுடைய) இரண்டு திருவடியின் என்லையைத் தேடிப் பார்ப்பதற்கும் கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவ பெருமான் மெச்சுகின்ற ஆண்மையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்டவனே, அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 360 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனதன, உடைய, காரிகள், கூடிய, தானத், தானன, பெரிய, ஒப்பற்ற, பெருமாளே, கொண்ட, ஆகிய