பாடல் 358 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தான ...... தந்ததான |
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான் குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன் குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய் அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட் டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய் திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர் திருச்சால கச்சோதி ...... தம்பிரானே. |
சொல்லப்டுகின்ற காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான பேர் எனக்குத் தான். உன் பேரில் (96 சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி ஒன்று பாடுவதற்கு, காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடுத்து, உலகத்தில் உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை, பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய், பண முடிச்சோடு பொற் காசுகளைக் கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும் அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா, என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி வாழ்வேனோ? இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று, அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய். நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே, அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 358 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தா, என்னும், அழகிய, கீழ், நான், கொண்டு