பாடல் 357 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன ...... தனதான |
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே ஆர வட்டமு லைக்குவி லைப்பண மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய் மேலி ளைப்புமு சிப்பும வத்தையு மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே மேதி னிக்குள பத்தனெ னப்பல பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய் பீலி மிக்கம யிற்றுர கத்தினி லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள் வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே. |
ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர், மன்மதனுடைய காமசாஸ்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தியர்கள், எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் சப்படுத்துபவர்கள், தெருமுனையில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறு கொடுத்து நடித்து ஒழுகுவார்கள், இத்தகைய விலைமாதருடன் நான் ஆசை பூண்டவனாய், அதன் பின்னர் வாட்டமும், மெலிவும், வேதனையும் அடைந்து, உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும். தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஏறி, (எதிரிகளை) ஒரு சேர ஒன்றாக வளைத்து கூறுபடுத்தி உடல்கள் கிழிபட்ட அந்த போர்க் களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்த அத்தனை பேரையும் கொடுமையான போரில் மடிவித்துக் கொன்று, பெரிய பேய்கள் கை கொட்டி நடனமிடவும், கருமையான கழுகுகள் உடன் சேர்ந்து ஆடவும், ஏலத்தின் நறுமணம் வீசும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திய ஆற்றலைப் புகழ்வோர்கள் யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைக் கொடுத்து அருள்பவனே, ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர், மூன்று கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 357 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, கொடுத்து, பெரிய, அந்த, கண்களை, பெருமாளே, கொண்ட, உடையவர்