பாடல் 356 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ....
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தனதான |
ஆரமணி வாரைப் பீறியற மேலிட் டாடவர்கள் வாடத் ...... துறவோரை ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப் பாளித படீரத் ...... தனமானார் காரளக நீழற் காதளவு மோடிக் காதுமபி ராமக் ...... கயல்போலக் காலனுடல் போடத் தேடிவரு நாளிற் காலைமற வாமற் ...... புகல்வேனோ பாரடைய வாழ்வித் தாரபதி பாசச் சாமளக லாபப் ...... பரியேறிப் பாய்மதக போலத் தானொடிக லாமுற் பாடிவரு மேழைச் ...... சிறியோனே சூரர்புர சூறைக் காரசுரர் காவற் காரஇள வேனற் ...... புனமேவுந் தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச் சோதிவளர் காவைப் ...... பெருமாளே. |
மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, மடல் ஏறும்படிச்* செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட) யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும் தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, முன்பொரு காலத்தில் மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே, சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே, பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 356 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தானத், கொண்ட, குதிரை, அழகிய, வருகின்ற, செய்து, பெருமாளே, தோன்றி, மடல், உடைய