பாடல் 351 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன ...... தனதானா |
வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய நீந்திப்பது மாதியை மீதினி லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை வார்ந்துப்பக ழீயெதி ராகிமை கூர்ந்துப்பரி யாவரி சேரவை சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே சாய்ந்துப்பனை யூணவ ரானபொ லாய்ந்துப்பணி னாரிரு தாளினில் வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே சாந்தப்பிய மாமலை நேர்முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் காந்தப்பத மாறியு லாவுய ராந்தற்குரு நாதனு மாகியெ போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே காந்தக்கலு மூசியு மேயென ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே. |
நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என்று இவ்வாறு தாளங்கள் ஒலிக்க, அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க, மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 351 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தோதிமி, தாகிட, சேகெண, தாந்தத்தன, பெரிய, ஒப்பற்ற, இவ்வாறு, மூர்த்தியாகிய, காஞ்சி, மாற்றி, அந்த, பெருமாளே, தோந்திக்கிட, நாதனு, மீதினி, சேஞ்செக்கண, தாந்தக்கிட, பெரியோனே, உள்ள