பாடல் 350 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ஆபோகி;
தாளம் - ஆதி - 2 களை
- எடுப்பு 1/4 இடம்
- எடுப்பு 1/4 இடம்
தந்த தாத்தன தன்ன தனந்தன தத்தத் தத்தத் ...... தனதானா |
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம யத்துக் கத்துத் ...... திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் ...... றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் ...... கருதாதோ வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு வெற்புப் பொட்டுப் ...... படமாசூர் வென்ற பார்த்திப பன்னிரு திண்புய வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு கைக்குக் கற்புத் ...... தவறாதே கம்பை யாற்றினி லன்னை தவம்புரி கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. |
வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும், சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின் வன்மையான கலைக்கூட்டத்தினின்று விலகி, மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று, தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய், உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி, அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ? வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து, மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே, வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே, வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே, ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு, கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த* கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.
* காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில் தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் - கச்சி புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 350 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கம்பா, கச்சி, காமாக்ஷி, காஞ்சீபுரத்தில், தேவி, தழும்பும், தேவியின், நதிக்கரையில், தத்தத், செய்து, பெருமாளே, அழகிய, மிக்க, சிவபிரானின், வென்ற