பாடல் 349 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

பாடல் 349 -
காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - .....
ராகம் - .....; தாளம் - .....
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த ...... தனதான |
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர் முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண் முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர் எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண் இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள் செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள் கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே. |
முத்து ரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு இயந்திரத்தை ஒத்த விசித்திரமான வழியைப் பின்பற்றுபவர்கள். முன் பிறவியிலேயே இழிந்தோர். மிக்க பாவம் செய்தவர்கள். முத்துக்களை உதிர்த்தது போல பேச்சுக்களைப் பேசுபவர்கள். அம்பு, வாள் இவைகளைப் போன்ற கண்களை உடைய அழிந்து போனவர்கள். மிக்க சூழ்ச்சியை உடையவர்கள். சிரிப்பினாலேயே ஏமாற்றுபவர்கள். வஞ்சனைப் பொருளுடன் பேசுபவர்கள். துஷ்டத்தனத்துடன் முழுமையான தப்பு வழியில் நடப்போர். தங்களுக்கு விருப்பமான கூட்டத்தில் சேரும் பொது மகளிர். இறுமாப்பு உடையவர்கள். துக்கத்தைத் தருபவர்கள் ஆகிய இம்மாதர்களின் வாழ்க்கையில் ஆசை வைத்து மன நோய் ஆகிய புண்ணைக் கொண்டு, இப்படிப்பட்ட வழியில் தடுமாற்றம் அடைவேனோ? தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் என்ற ஒலியை எழுப்பும் சின்ன உடுக்கை, இயக்கப்படும் தவில், முரசு இவைகளைக் கேட்டு எட்டுத் திக்குகளில் இருந்த மக்களின் உடலில் துக்கத்தை மலை போல் மேலிடுவதைக் கண்டு அதற்குக் காரணமாயிருந்த சூரனை சிவந்த (ரத்தக்) கடலுக்குள் ஆழ்த்திய வேலனே, கல் (மலை) போன்ற திரிபுரங்களை அழித்து நடனம் செய்த, திரு நீறு அணிந்த கடவுள், பித்தர், கூத்தப் பெருமான் (நடராஜனாகிய) சிவபெருமானுடைய குரு நாதனே, மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்ந்த வள்ளியுடன், வெற்றி வேலை ஏந்தி, காஞ்சீபுரத்தை விரும்பி நாள் தோறும் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 349 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, முத்து, தாத்த, பேசுபவர்கள், உடையவர்கள், ஆகிய, மிக்க, வழியில், பித்தர், தித்தி, மித்தி, னத்த, வெற்றி, பெருமாளே