பாடல் 347 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - லதாங்கி
; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தத்தத்தத் தானன தானன தத்தத்தத் தானன தானன தத்தத்தத் தானன தானன ...... தனதான |
மக்கட்குக் கூறரி தானது கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே மட்டிட்டுத் தேடவோ ணாதது தத்வத்திற் கோவைப டாதது மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும் முக்கட்பொற் பாளரு சாவிய அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா முட்டர்க்கெட் டாதது நான்மறை யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே செக்கட்சக் ராயுத மாதுலன் மெச்சப்புற் போதுப டாவிய திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள் கைக்கொட்டிட் டாடம கோததி செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி கக்கக்கைத் தாமரை வேல்விடு செச்சைக்கர்ப் பூரபு யாசல கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன் கற்புத்தப் பாதுல கேழையு மொக்கப்பெற் றாள்விளை யாடிய கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே. |
மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக்கூற அரிதானது, கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது, மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது, மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறியமுடியாதது, எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது, பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது, முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு, திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து, கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார் திருவிளையாடல்கள் பல புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 347 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தத்தத்தத், மலரையும், இருப்பது, பொருள், உள்ள, முடியாதது, பெருமாளே, டாதது, போதுப, மானது, எட்ட