பாடல் 345 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி- 3 1/2
தகிடதகதிமி- 3 1/2
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன ...... தனதான |
படிறொ ழுக்கமு மடம னத்துள படிப ரித்துட ...... னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற ...... உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட ...... மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு வினைய றப்பத ...... மருள்வாயே கொடியி டைக்குற வடிவி யைப்புணர் குமர கச்சியி ...... லமர்வோனே குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி ...... திருமார்பா பொடிப டப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் ...... குருநாதா பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை பொருது ழக்கிய ...... பெருமாளே. |
வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் உள்ளபடியே வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து, மிகவும் உயிர் வாடி நின்று, தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி* என்னைச் சுட்டுப் பொசுக்க, பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக. கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே, குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே, தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே, மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும் போர் செய்து கலக்கி அதிரவைத்த பெருமாளே.
* வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் உலகை எரித்தே அழிப்பதற்காக வட திசையிலிருந்து வரும் ஒரு நெருப்புக் கோளம் என்று சொல்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 345 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, அழகிய, பெருமாளே, உடைய