பாடல் 340 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான |
கலகலெ னப்பொற் சேந்த நூபுர பரிபுர மொத்தித் தாந்த னாமென கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங் கடிதட முற்றுக் காந்த ளாமென இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச் சலசல சச்சச் சேங்கை பூண்வளை பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத் தரளந கைப்பித் தாம்ப லாரிதழ் குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர் சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ திலதமு கப்பொற் காந்தி மாதுமை யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி திரிபுவ னத்தைக் காண்ட நாடகி குமரிசு கத்தைப் பூண்ட காரணி சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே அமரர்ம கட்குப் போந்த மால்கொளும் விபுதகு றத்திக் காண்ட வாதின மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே. |
கலகல என்று அழகிய சிவந்த பாத கிண்கிணியும், சிலம்பும் தாள ஒத்துப் போல தாம் தனாம் என்று ஒலிக்க, தாமரை மலர் போன்ற கைகள், அதற்குச் சரியாக அமைந்த தாந்தோம் என ஆடல் பயில்கின்ற தந்திரத்தினர், செழிப்பு வாய்ந்த தங்கள் பெண்குறி விரிவடைய, காந்தள் மலரை ஒத்த ஒரு பிடி அளவே உள்ள மெல்லிய இடையில் பட்டாடை பொருந்திய ஆலிலை போன்ற வயிற்றுடனும், கனத்த தனங்கள் அழகு தந்து விளங்கும் மார்புடனும் முத்து மாலை அசைய, சலசல சச்ச என்று ஒலிக்கும் சிவந்த கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்க, நறு மணம் கமழும் பச்சைப் பொட்டு பொருந்தி விளங்கும் தாமரை போன்ற முகத்தில் உள்ள வாள் போன்ற கண்கள் சுழன்று அசைய, முத்துப் போன்ற பற்கள் ஒளி வீச, செவ்வாம்பல் போன்ற வாயிதழைக் கொண்டவர்கள், சிறந்த மேகம் போன்ற, சீவப்பட்ட கூந்தலை உடைவர்கள் காம லீலைப் பேச்சுக்களைப் பேசி புணர்கின்ற, மாமிசம் உண்ணும் பொது மாதர்களுடைய சம்பந்தம் நல்லதாகுமோ? பொட்டு அணிந்த முகத்தின் அழகிய ஒளி வீசும் மாதாகிய உமா தேவி என் மீது திருவருள் வைத்து என்னை ஆண்டருளிய நாயகி, சிவ பெருமானது திருவுருவத்தில் இடது பாதியில் சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி, மூன்று உலகங்களையும் படைத்த நாடகத்தினள், குமரி, சுகத்தையே அணிந்துள்ள காரண சக்தி, ஜோதி மயமான சிவனுடைய தேவி, பரா சக்தி சாம்பவி ஆகிய உமை அம்மை அருளிய பாலகனே, பேய்கள் இரத்தத்தில் நன்றாக முழுகியும், நரியும் கழுகும் (உண்டதால் உடல்) உப்பிப் பெருக்க (சமயம் வாய்த்ததென்று) வாயை வைத்து உண்ணவும் அசுரர்கள் குலத்தைச் சுட்டு அழித்த வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, தேவர் மகளான தேவயானை மீது பாயும் ஆசை கொண்ட தேவனே, குற வள்ளியை ஆண்டவனே, நாள்தோறும் அழகு விளங்கி மேம்பட காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 340 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்த, தனதன, தானன, தத்தத், அசைய, விளங்கும், அணிந்துள்ள, அழகு, மீது, சக்தி, வைத்து, உள்ள, தேவி, பொட்டு, சிவந்த, பார்வதி, நாயகி, சலசல, ஆலிலை, சிவகாமி, காண்ட, ஒலிக்க, அழகிய, பெருமாளே, தாமரை