பாடல் 339 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - பெஹாக்;
தாளம் - அங்கதாளம் - 15 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தனதன தானா தத்தத் ...... தனதான |
கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் ...... தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் ...... கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் ...... கரிதாய மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் ...... புகல்வாயே தரும வீம அருச்சுன நகுலச காதே வர்க்குப் ...... புகலாகிச் சமர பூமியில் விக்ரம வளைகொடு நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் குரும கீதல முட்பட வுளமது கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் குலவு தேர்கட வச்சுதன் மருககு மாரா கச்சிப் ...... பெருமாளே. |
வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும், குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான மன உணர்ச்சிக்கு எட்டாததான, மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக. தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி, போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி, நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில் குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக, தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும், (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே, குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 339 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதிமி, பெருமாளே