பாடல் 338 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனதன தானாந்தன தனதன தானாந்தன தனதன தானாந்தன ...... தனதான |
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந் தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம் இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள் இதவிய பாதாம்புய ...... மருள்வாயே அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர அதுலன நீலாம்பர ...... மறியாத அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள் அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே. |
(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில்* முதல் கணையாகிய) தாமரை மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக் கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்) கலகப் போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம தாகம் நீங்கும்படி, கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர் போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுக. அ, ம, கர, (ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அ·றிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய் மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும், (தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு அறங்கள்** நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே, பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புத்திரனே, நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள் வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள் வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய பெருமாளே.
* மன்மதனுடைய ஐந்து பாணங்கள் வருமாறு. முதற் கணை =தாமரை. நடுக் கணை = அசோகம். கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 338 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உணவு, மலர், தனதன, கணையாகிய, தொழில், தானாந்தன, அமைத்தல், முப்பத்திரண்டு, உடையவரும், நல்கல், அநாதைகளுக்கு, காத்தல், மருந்து, வளர்த்தல், தருவதான, பெண், மன்மதனுடைய, தாமரை, ஐந்து, கடைக், முல்லை, மீது, பெருமாளே, ஆகிய, மலர்ப்