பாடல் 337 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன ...... தனதான |
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய மச்சக் கொடிமதன் ...... மலராலுங் கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை அச்சப் படவெழு ...... மதனாலும் பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது சொச்சத் தரமல ...... இனிதான பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடையது ...... தரவேணும் பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய கச்சிப் பதிதனி ...... லுறைவோனே பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட உற்றுப் பொரவல ...... கதிர்வேலா இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய ...... திருமார்பா எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே. |
கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற, மீன் கொடியைக் கொண்ட மன்மதனுடைய பூக்கணைகளாலும், தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன் ஆலகால விஷத்தை உடைய கடலினிடையே இவள் பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும், பைத்தியம் பிடித்து இத் தலைவி மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமான அளவு இல்லை. (ஆதலால், முருகா,) இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்கள் இடையிடையே வைத்துச் சொருகப்பட்ட வெட்சி மாலையை நீ இவளுக்குத் தந்தருள வேண்டும். பச்சை நிறமுள்ள உமா தேவி அன்புடன் (சிவ பிரானுக்கு) பூஜை செய்து அருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே, அன்பு வைத்து உன்னைப் பணிபவர்களுக்கு குற்றம் செய்யும் பகைவர்கள் அழிந்து போக, வந்து போர் செய்து உதவிய கதிர் வேலனே, உன் மீது காதல் கொண்டு அழகு வாய்ந்தவளும், மழலைமொழி பேசும் குறத்தி ஆனவளுமான வள்ளி நாயகி மெச்சித் தழுவிய அழகிய மார்பனே, ஏழு குல மலைகளுடன் கிரெளஞ்சமலையும் சேர்த்து எட்டு மலைகளும் அடியோடு பொடியாகும்படி சண்டை செய்து, அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர் அம்புகள், சந்திரன், கடல் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 337 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், செய்து, தனதன, உடைய, சந்திரன், கொண்டு, நாயகி, பெருமாளே, மெச்சித், தழுவிய, வெட்டித், அழகிய