பாடல் 336 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் ...... தனதான |
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக் கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே. |
கண்கள் வேல், அம்பு, மீன், நீர்க்கிடமான கடல், வியக்கத் தக்க நீலோற்பல மலர், விஷம் போன்றவை என்றும், நெஞ்சில் உள்ள மார்பகமோ பருத்த மலை போன்றது, கூந்தல் கொத்து இருண்ட மேகம் தான் என்று உவமை கூறி, பொய் பேசி, பல சொற்களைக் கற்பனையாக அமைத்து, உருகி, வலிமை உள்ள மனம் நெகிழ்ந்து, நிலை தடுமாற்றம் அடைந்து, தூக்கம் ஒழிந்து, செய்ய வேண்டிய செயல்கள் ஒழிந்து, துக்கம் கொண்டு, தளர்ச்சி அடைந்து, கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்கு இந்தவாறு இளைத்துப் போய் அலையாமல், வேதத்தின் அழகிய பொருளைக் கூறியவனாகிய உனது சிவந்த திருவடிக்கு குரா மலரைத் இட்டுப் பூஜித்து, அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுது பூஜிக்கும் வெட்சி மலர் சூழ்ந்த உனது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ? புயலை* வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே, குதிரைகள் சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக் கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே, பூமியை சமநிலையில் வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்துசமமான நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்* தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, (சூரனாகிய) மாமரம் வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே.
* இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள் தேவயானைக்கும் வாகனம்.
** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது.சிவபெருமான் ஆணையின்படி அகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 336 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்தத், அழகிய, வலிமை, போய், அடைந்து, பூமியை, மலையில், திசை, வாகனம், உனது, பெருமாளே, நிலை, உள்ள, ஒழிந்து, மலர், மேகம்