பாடல் 333 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் ...... தனதான |
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக் கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக் கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும் சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட் டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன் அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட் புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத் தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட் கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச் சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச் சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே. |
கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, இழிவான சொற்களைக் கற்று உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச, தவறுதலான வழியில் சென்று, குப்பை நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று, உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம் வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, ஆயுதங்களைச் செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன் உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர உருவத்தை அடைந்து நிற்க, அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற, கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட, கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு, சக்தியாகிய வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே, சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.
வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள் மிகுதியாக அமைந்த பாடல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 333 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், சத்திக், தனனத், என்னும், கண்டு, பெற்று, சூரன், பாடல், சக்தியாகிய, ஆட்டம், அடைந்து, கெட்டுப், பெறுவேனோ, தக்குத், குமரப், பெருமாளே, எல்லாம்