பாடல் 332 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான |
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் சுத்தப் பட்டிட் ...... டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட் சொற்குற் றத்துத் ...... துறைநாடி பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற் றொத்துக் கித்திப் ...... பிணிமாதர் பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப் பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத் தத்திக் கத்துப் ...... பலமீவாய் அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத் தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய் கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக் கைத்தச் சத்திப் ...... படையேவுங் கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. |
தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ? அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப் போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம் அளித்தவனே, வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே, ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும், கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
* நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள் ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் - திருமுருகாற்றுப்படை.
** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு இருந்த பெருங் காதலை விளக்கும் - கந்த புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 332 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், அழகிய, இருந்த, அந்த, சக்தி, தத்திக், வள்ளிக்கு, சத்திப், பெருமாளே