பாடல் 327 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ......
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக் கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங் கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப் பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும் பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப் பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய் பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப் புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப் புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச் சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத் திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
ஒரு தாயின் கருவாகச் சேர்ந்து உருவம் பெரிதாகி, (பத்து மாதம் என்னும் கணக்கு) ஒருமிக்க பூமியில் வந்து சேர்ந்து, (வளரும் பருவங்களுக்கு உரிய) உருவங்களை முறையே அடைந்து, எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வாழ்நாளை வீணாகச் செலுத்தும் காலத்தில், (ஆயுளின் காலத்தைக்) கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை அறிந்து மாறுபாடு கொண்டு, விரைந்து வந்து மிக்க கோபத்தைக் காட்டி பாசக் கயிற்றை (கழுத்தைச் சுற்றி) வீசிப் பிடித்து யமன் என்னுடைய உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதை நான் காண, உயிர் போய் விட்டது எனத் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர் (என்) பின்னாலேயே (சுடுகாடு வரை) சென்று, பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் அந்தப் பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்து, உடல் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற இந்தப் பிறப்பில் உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சி மாலை சூழ்ந்த திருவடியைத் தாராய். மலை போன்றதும், பச்சைக் கற்பூரம், ரவிக்கை (இவைகளை அணிந்ததுமான) மார்பக அழகைக் கொண்டவளும், தினை வளரும் பசுமை வாய்ந்த புனத்திலிருந்தவளும், மிழற்றும் பேச்சை உடையவளுமான குறப் பெண்கிளி வள்ளிக்கு இனியவனே, திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை கூட்டி வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே, அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகிய அசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், கோபித்து அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே, பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்) சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே.
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 327 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், வந்து, கொண்டு, அந்தப், இருந்த, பிறப்பில், உள்ள, வாய்ந்த, கொண்ட, பிடித்து, சேர்ந்து, வளரும், அடைந்து, பெருமாளே, என்னும்