பாடல் 328 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட் பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங் கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட் டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல் புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற் பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர் பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற் பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக் கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச் சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத் திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள் பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப் பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப் படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
பற்கள் கறை ஏறும்படி (பாக்கு வெற்றிலையின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும், சிறிது நகைத்தும், கொஞ்சம் அதட்டியும், கண்களைப் பின் சுழல்வது போலச் செய்து முறைத்து விழித்தும், இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு, சிமிழை ஒத்த மார்பகங்கள் படும்படி இறுக அணைத்து, (அதனால்) மனதை உருக்கி, கற்பு மனநிலை அழிபட, மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி இன்பத்தைத் தர, கற்பூரத்தைப் பொடி செய்து தேய்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து கூடுகின்ற விலைமாதர்களின் இணக்கத்தை நீக்கி, சிறிதேனும் (அடியேனைக்) காப்பாற்ற, உனது அழகிய திருவடியை அடையக்கூடிய பாக்கியத்தைப் பெறுவேனோ? வலிமை வாய்ந்த மாமரமாகி நின்ற சூரனை அழிக்கும்படி குத்தியும், பெருமிதத்துடன் கர்ச்சித்து, சக்கரம் ஏந்திய திருமாலின் மகனாகிய பிரமனுக்குப் பொருந்த விலங்கை மாட்டிக் கோபித்தும், பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை பொடி எழும்படி நொறுக்கியும், அதை நிந்தித்தும், (போர்க்களத்தில்) புதிய ரத்தத்தில் சிரிப்புடன் அளைந்து பல பேய்கள் பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்பதற்குரிய குவியல்களைப் பிடுங்க, (உண்ணக் கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு) மிகுந்த பசியும் ஆத்திரமும் வேகத்தில் அடியோடு நீங்க, யுத்த களத்திற்குப் புகுந்து சண்டை செய்தவனே, ஆபரணமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய புயத்தில் உக்ரமான ஆயுதமாகிய சக்தி வேற் படையைத் தாங்கி, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 328 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், அழகிய, பொடி, செய்து, பெருமாளே