பாடல் 326 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக் கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர் கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த் திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால் எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக் கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன் இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற் றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட் டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட் டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப் புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக் கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப் புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
குடம் போன்ற மார்பகத்தைப் பற்றுவது போலப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய விலைமாதர்களின் மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் சலித்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, இறந்து உயிர் போனவுடன் (உடலை), (சுடுகாட்டில்) போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்பை பற்றிக்கொள்ளும்படி கொளுத்தி, சுற்றத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உன் திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ? தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இடமான சொர்க்க பூமியை வளைத்துக் கொண்டும், நீங்கள் யாவரும் அலைச்சல் கொள்ளுங்கள் என்று கூறி நீங்கிய சூரனை, அடித்தும் கோபித்தும் இடித்தும், பொடிபடும்படியாக (அவனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளையும் அழிவுறக் குத்தியும், அவனை வருத்தியும், வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலைக் கலக்கமுற்று ஒடுங்கச் செய்து அலைத்தும், பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் வருத்தமும் நெஞ்சிலே கொண்டு (கடலில்) மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்பவனே, தினைப்புனத்தில் அழகிய குறமகள் வள்ளியைச் சேர்வதற்கு, அவளைத் தந்திர மொழிகளால் துதித்து, பின்பு அவளை மணந்தவனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 326 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், அழகிய, அடித்தும், சூரனை, கொண்டு, வைத்து, பெருமாளே, பற்றி