பாடல் 325 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட் டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத் திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற் றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப் பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப் பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப் பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப் படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
மாமிசத்துடன், அதைப் பற்றியுள்ள ரத்தத்தைச் சேர்த்து, அந்த ரத்தம் பொருந்துவதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பி வைத்து, எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை வகுத்து, எடுத்து ஒரு பாத்திரமாக ஏற்படுத்தி அலங்கரித்த புதிய வீட்டில் புகுந்து (அதாவது உடலெடுத்துப் பிறந்து), எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும் சற்று வேண்டும் என்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதித்து, இந்தப் பிறப்பை அடைந்து, தூக்கம், கனவு இவைகளை அடைந்து, மயக்கம் உற்று, வேதனை அனுபவித்துத் திரியாமல், உனது தாமரைத் திருவடிகளின் சார்பைப் பற்றி உய்வதற்கு, உன் அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உனது நிலைத்த வீரத் திருப்புகழைச் சொல்லித் திரிய மாட்டேனோ? பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய கூந்தலைக் கொண்ட, பச்சை நிறத்தாளான கொடி போன்ற பார்வதிக்கு ஆசை பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள சிவபெருமானுடைய (சடையிலிருந்து) பெருகுகின்ற கங்கைக்கும், அந்தப் பெரும் துதிக்கையை உடைய விநாயகரைப் போல பெரிய வயிற்றை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவனே, உயரமான கோழிக் கொடியை உடையவனே, பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குள்ள பூதக் கூட்டங்களின் உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே, படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதி சேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த, திருமால் ஆசைப்பட்ட இடமான* கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே.
* பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்க, அதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார்.பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப் பூஜித்து அந்நகரில் விளங்கினார் - காஞ்சிப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 325 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், உடைய, கொண்ட, திருமால், அடைந்து, அழகிய, பின்னர், உனது, பெருமாளே, அந்த, வேண்டும்