பாடல் 322 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - சுத்த
தன்யாஸி; தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான |
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவனெ னத்திக் கியம்பு கின்றது புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி கணபண ரத்நப் புயங்க கங்கணி குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே. |
முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் போற்றித் துதிக்கும் உனது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும் பாலாம்பிகை, நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள், நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**, கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**, (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சிவபிரானைக் குறிக்கும் செயல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 322 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவள், உணவு, இவன், தனதன, என்றும், தந்தன, தனந்த, தத்தத், புரியும், தரித்தவள், காத்தல், முப்பத்திரண்டு, அழகிய, கருணை, உடைய, அநாதைகளுக்கு, வளர்த்தல், நல்கல், தொழில், அமைத்தல், மருந்து, கொடி, சிவந்த, தந்திடாதோ, செக்கச், தழுவிய, முத்துச், கிண்கிணி, பிறந்த, சங்கரி, மேலான, புயங்க, சிகண்டி, பொழியும், உனது, பெரிய, போன்றவள்