பாடல் 323 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
.............; தாளம் -
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத் தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற் றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற் றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக் கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற் குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக் குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற் பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழின் நுகர்ச்சியை நீங்கி, துன்பம் தரும் வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கம் அடைந்து நான் சுழற்சி உறாமல், எலும்பு, இந்திரியம், மலச்சேறு, தசை, தோல் இவை கூடிய பானையாகிய உடம்பை அடைந்து, பாசம் சேர்ந்துள்ள பாவ நிலையில் அலைச்சல் உறாமல், அந்த அந்தச் சத்தத்துக்கும் சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கு, (அந்தத் தொனியின்) உள்ளர்த்தத்தை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே சிக்குண்டு, வேதனைப்பட்டு (சொல் ஆராய்ச்சியால்) சோர்வு உறாமல், (இவற்றை எல்லாம் தவிர்த்து) செம்மையான தன்மை சேர்ந்த பூங்கொத்துக்களும், நீலோற்பல மலர், வெட்சிப் பூ இவைகளால் ஆகிய மாலைகளின் வரிசைகளும், கடம்ப மலரும் கொண்ட அழகிய உனது திருவடியைப் புகழ்ந்து தொழ மாட்டேனோ? கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை அழித்து தன் வசப்படுத்தி (அவனது இரு கூறுகளான மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு), பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த வேலனே, குறவர் குலக் கிளியாகிய வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில் நின்ற தேவயானையினுடையவும் முத்தாபரணம் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய, மூங்கில் காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவனே, கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு, (கேட்டதைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவனே, கொன்றையும், பாம்பும் அணிந்த திரண்ட சடையை உடைய சிவபெருமானது பாகத்து அமர்ந்த கொடி அனையவளும், கற்புக் கடலானவளும் ஆகிய உமாதேவி வீற்றிருக்கும் காஞ்சித் திருநகரில் அமர்ந்த அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 323 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், உறாமல், உள்ள, கொண்டு, நின்ற, அமர்ந்த, அணிந்த, அழகிய, ஆகிய, பெருமாளே, தரும், அடைந்து, சுத்தமான, கொண்ட