பாடல் 320 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ஹிந்தோளம்;
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக் குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங் கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத் தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந் ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத் தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ் சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே. |
தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன், வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன், பொறுமையே இல்லாதவன், பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும், பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன், பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன், நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும்*, மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ? பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வெந்து போய் வற்றிவிடவும், பெருமைமிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும், அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும், எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில் அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே.
* வட்டமலை என்ற தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 320 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தத்தம், தனதனந், தத்தத், இல்லாதவன், தத்தன, யாவும், போய், முழுக்க, பெருமாளே, நிற்கும், இடம், உள்ள