பாடல் 319 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ் சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந் தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித் தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும் தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன் தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின் றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந் ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங் கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற் றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங் கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண் டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண் டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங் குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக் குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண் டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங் குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ் சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண் டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச் சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன் றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ் சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே. |
மாமிசமும் நெருங்கிய தோலும் அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக, தலைமயிர் வெண்ணிறமுடைய கொக்கு போல நரைத்து, அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்து, எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சி உற்று, ஐம்பொறிகளும் தொழில் மாற்றம் அடைந்து, தடி ஏந்தி திசை தடுமாறி நடக்கும்படியாக தளர்ச்சி அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய், அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய், அயலாரும் சே சே என்று இகழ, பிள்ளைகளும் சீ சீ என்று பரிகசிக்க, உடன் தங்கியிருந்த பெண்களும் தூ தூ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்? கடிவாளம் இட்டு நன்றாக அங்கவடி சேர்த்து, எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும், அந்த ஞானத்தை விரும்பும் (வேதங்களாகிய நான்கு) குதிரைகளைப் பூட்டி நெருங்கச் செலுத்தும் சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் அமைந்த சிறந்த தேரில் ஏறி, (திருமாலாகிய) ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்கத் திரிபுரங்களை எரித்து தமது வெற்றியைப் பரப்பிய தலைவராகிய சிவபெருமான் வணங்க காஞ்சீபுரத்தில் நிற்கும் ஒளி வேலனே, பிரமன் தடைபட்டு நிற்கும்படியும், வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலையும் வேலால் குத்துப்பட்டு விழுந்து அழியவும், தெள்ளிய அலைகள் வீசும் கடலையும் எல்லா மதில் சுவர்களையும் தாண்டி உலவிச் சென்று பகைவர்களை எதிர்த்து வென்று (அசுரர்களுடைய) தலைகளும் அமுங்கி நாசம் அடைய, அகன்ற கண்கள் திகைப்பு அடைய, அசுரர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையிலிருந்த கறைபட்ட வாளாயுதங்கள் சிதறிச் சென்று தூரத்தில் போய் போர்க்களத்தில் பொடி பட்டு விழும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 319 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனந், தத்தம், தத்தன, தத்தத், வேலால், சென்று, அடைய, அணிந்ததும், அசுரர்களுடைய, அழகிய, சுத்தப், யிட்டெண், பெருமாளே, போய், போதும்