பாடல் 317 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .........
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும் பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும் பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும் படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ் சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின் பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும் சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும் ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும் கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும் பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் கரியகொண் டற்கொப் பித்தக துப்புந் திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின் கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங் கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங் கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே. |
திருமாலும் பிரமனும் தங்கள் மலர்வாய் திறந்து தமது குறைகளை எடுத்துக் கூற, ஒன்று சேர்ந்த தேவர்கள் வணங்கி நிற்க, ஊடுருவச் சென்று (உனது வேல்) அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும், அப்போது அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டு (தாம்) தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும், பல விதமான இசைக்கருவிகளை முழக்கி பரிகாசம் பேசியும், துர்க்கையுடன் சேர்ந்து குச்சரி என்னும் ஒரு பண்ணை (குர்ஜரி என்ற ராகத்தை) மெச்சி வியக்கும்படி பாடியும், வடவா முகாக்கினி போல் தீயை வெளிப்படுத்தி சிவந்த கண்களை விழித்தும், மண்டலமாய் ஆடும் கூத்து வகையை ஆடி எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும், போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், (அசுரர்களைத்) தாக்கி, எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களை தியானித்தும், சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு போற்றியும் (அத்தகைய பக்தி) என் மனதில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றை நான் அடைவேனோ? பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற மார்பும், சிறிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும், விருப்பம் முழுதும் ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும், சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளியதுமான சிறிய வயிறும், இருண்ட கறுத்த மேகத்துக்கு நிகரான கூந்தலும், நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும், முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும், தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும், தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே.
* தமிழின் ஏழிசைகள்:குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 317 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தம், தத்தன, கைக்கிளை, தத்தத், தனதனந், என்றும், பேற்றை, சிறிய, விருப்பம், சேர்ந்து, பெருமாளே, குச்சரி, சரவணன், தாளம், முத்தின், ஒன்று