பாடல் 316 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென் றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் கனகனங் கத்திற் குத்திநி ணச்செங் குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன் பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண் புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே. |
நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர்மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், மற்றும் அத்தணிகைமலைக்குச் சமமான மற்றத் தலங்களும், கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும், திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும், தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று, மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும், அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும், அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று, அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ? வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும், கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின் மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி, எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும், ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும், தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், உலகுக்கெல்லாம் தந்தையும், பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும், பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும், புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே.
* காஞ்சியில் 'திருமேற்றளி' என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 316 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெற்று, என்றும், தனதனந், தத்தம், தத்தத், தத்தன, மேகம், உடைய, பெருமாளே, அழகிய