பாடல் 300 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன ...... தனதான |
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே சீருற்றெழு ஞானமு டன்கல்வி நேரற்றவர் மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின் மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களை வீரத்தொடு பாரில ரிந்தெழு பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா பூகக்குலை யேவிழ மென்கயல் தாவக்குலை வாழைக ளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி சாரற்கிரி தோறுமெ ழும்பொழில் தூரத்தொழு வார்வினை சிந்திடு தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந் தார்மெத்திய தோரண மென்தெரு தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள் தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே. |
கச்சை மீறி எழுகின்ற, ஆபரணம் அணிந்த மார்பகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவர்கள், மேகத்தின் கரு நிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகு உடையவர்கள், இளங் குயில் போல் இனிமையுள்ள பேச்சுக்களைப் பேசிக் கொஞ்சுபவர்கள், தெருவில் படாடோபத்துடன் எதிர்ப்படுகின்ற, காம மயக்கம் உண்டாக்க வல்ல, மாய வித்தைக்காரிகள், சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்களை உடையவர்கள், அழகுள்ள குண்டலம் அணிந்துள்ள, புடமிட்ட பொன் போன்ற நிறத்தவர்கள் (ஆகிய பொது மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கத்தால், சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் இல்லாத அந்த விலைமாதர்கள் மீதுள்ள ஆசை காரணமாக நான் ஒளி மழுங்கி, எனக்குள்ள அறிவும் கெட்டுப் போய் உயிரை இழப்பதற்கு முன்பாக, சேவற் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச் சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக. போர்க் கோலம் பூண்டு வந்த அசுரர்களின் தலைகளை வீரத்துடன் இந்தப் பூமியில் வெட்டி வீழ்த்தி, எழுந்துள்ள பூத கணங்களும், காக்கைகளும் ரத்தத்தைக் குடிக்கும்படி வேலைச் செலுத்தியவனே, பாக்கு மரங்களின் குலைகள் சாய்ந்து விழும்படி மிருதுவான உடல் வாய்ந்த கயல் மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் (கீழுள்ள) வாழைக் குலைகளும் நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்த செந்நெற் கதிர்களும் உதிர்ந்து விழும் வயல்கள் பல கோடிக் கணக்காகவும், மலைச் சாரல் தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், தூரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினைகளைத் தொலைக்கும், பொன் மயமாக எழுந்துள்ள கோபுரங்களும், மண்டபங்களும் சூழ்ந்துள்ள, மாலைகளும், நிறைந்த தோரணங்களும், அமைதியான தெருக்களும் உள்ள, தேர் சுற்றி வருவதும் ஆகிய பெரிய ஊர், தேவர்கள் யாவரும் புகழும் திருத்தணிகையாகிய அழகிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 300 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்தன, எழுகின்ற, உடையவர்கள், தந்தன, தானன, எழுந்துள்ள, குலைகள், மீதுள்ள, பொன், பெருமாளே, ஆகிய