பாடல் 301 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் ...... விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ் சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் ...... கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புக ழோதுங் ...... கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ் சியைப்புணர் வாகம் ...... புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும் பொருக்கெழ வானும் ...... புகைமூளச் சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந் திறக்கம ராடுந் ...... திறல்வேலா திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
வினையைப் பெருக்குவதற்குக் காரணமான மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்), மிகப் பலவான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய காமரசப் போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து, தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க. தினைப் புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும், கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும், கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 301 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், அடியார்கள், திருத்தணிகையில், பெருமாளே, ழோதுங், கொடிய