பாடல் 299 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - காபி ;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
- எடுப்பு - அதீதம்
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
- எடுப்பு - அதீதம்
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனத்ததன தனதான தனத்ததன தனதான தனத்ததன தனதான ...... தனதான |
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே. |
வரிகளோடு கூடிய கலைமானுக்குச் சமமான கடைக்கண் பார்வையால் இளைஞர்களை மயக்கக்கூடிய பெண்களின் மையலாலே அறிவு தடுமாறி, கையிலுள்ள பொருள் அத்தனையும் அப்பெண்களுக்கே கொடுத்து வறுமையை அடைந்து வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும், அதன் காரணமாக ஒருவருடன் நட்பாகியும், இன்னொருவருடன் பகையாகியும், வேறு ஒருவரை மிகவும் விரும்பியும் அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தை தந்தருள்வாயாக. அருணகிரிநாதன் என்ற இந்த அன்பன் விரிவாக கூறிய தமிழினால் ஆன இந்தத் திருப்புகழ் மாலையை நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே, சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும், ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும், அற்புதங்கள் விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே, ஆணவத்தோடு போர் செய்ய வந்த சூராதி அசுரர்களின் குலத்தையே வேரோடு அழியுமாறு தாக்கிய கூர்வேலினை அழகிய கரத்தில் ஏந்தியவனே, அழகு குலவி விளங்குவதும், ஒப்பற்ற நீலோற்பல மலரை மலரும் சுனையை உடையதும் ஆன அழகிய திருத்தணிகை மலை மீதுள்ள பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 299 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தனத்ததன, ஒப்பற்ற, மிகவும், அழகிய, திருத்தணிகை, தகதிமி, பெருமாளே