பாடல் 29 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - காபி; தாளம்
- அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன ...... தனதான |
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டானவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வேகணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே. |
அனிச்சம்* பூவைப்போல் மென்மை உடையதும், பஞ்சு அடிக்கும் வில்லால் அடிக்க மாசுகள் நீங்கிய துவளுகின்ற மென்பஞ்சைப் போன்றதும், நீர் நிலையை விடாது பற்றுவதுமான அழகிய அன்னப் பறவையின் மெல்லிய இறகு போன்றதுமான மிக மிருதுவான சிறிய பாதங்களும் உடைய இளம் மானொத்த விலைமாதர்களது சூரியனைப் போல ஒளி வீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்ட அழகிய அணிகலன்களை அணிந்த கச்சுடைய மார்பகங்களின் மேல் முகத்தை அழுத்துகின்ற பாவம் செய்த என்னை, என் ஜன்மம் கடைத்தேறும் வழியை ஆராய்ந்து அறியாத பரம சண்டாளனை, வீணனை, பெரிய செல்வமுடைமையைக் கண்டு ஆணவம் கொண்ட முழு மூடனை, மாமிசத்தை ஆசையுடன் உண்கின்ற பாழானவனை, ஒப்பற்ற சடாக்ஷர (சரவணபவ) மந்திரத்தைச் சொல்லாமல், சாஸ்திரத்திலிருந்து மாறுபட்ட பேச்சுக்களையே பேசுகின்ற காம விகாரனை, தர்ம வழியில் ஒழுகாத மூதேவியாகிய (என் குற்றங்களை எல்லாம் பொறுத்து) என்னை அழைத்து உனது பாதுகையை நீ என் முடிமேல் சூட்ட நான் திருவருளைப் பெறுவேனோ? போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ), அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே, திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும், விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும் ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே. (வள்ளிமலையிலிருந்த) தினைப் புனத்தில் வாழ்ந்த செழிப்பான காட்டு வேடர்கள் திகைப்புற்று இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக வேங்கை மரமாய் அவர்களின் முன் நின்ற திறமை வாய்ந்த கந்தனே, வள்ளி நாயகி கண்டு ஆசைப்படும் கட்டழகு உடைய வேலனே, சிறந்த தாமரை ஓடையிலும், உயர்ந்த உப்பரிகையிலும் நிறைந்த கர்ப்பம் கொண்ட சங்குகள் வெண்ணிறமுடைய முத்துக்களை அலைகள் அள்ளி வீசுகின்ற (கடற்கரை உள்ள) திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே, தேவர்கள் பெருமாளே.
* அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 29 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கொண்ட, தனத்தந், தகதிமி, உயர்ந்த, வீசுகின்ற, என்னை, கண்டு, சங்குகள், ஒப்பற்ற, உடைய, பெரிய, மென்மை, பெறுவேனோ, மூடனை, வீசிய, முருகோனே, நாயகி, பெருமாளே, தாமரை, அழகிய