பாடல் 239 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - காபி; தாளம்
- ஆதி - திஸ்ர நடை - 12
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் ...... தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித் தளர்வுற் றொழியக் ...... கடவேனோ இமயத் துமயிற் கொருபக் கமளித் தவருக் கிசையப் ...... புகல்வோனே இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா சமயச் சிலுகிட் டவரைத் தவறித் தவமுற் றவருட் ...... புகநாடும் சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் ...... பெருமாளே. |
மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள் நெறியினின்றும் தவறிப் போய் அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 239 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், நான், எனது, குமரப், சமயச், பெருமாளே