பாடல் 228 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - காபி, தாளம்
- மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி 2
தகிட-1 1/2, தகதிமி 2
தான தனதன தான தனதன தான தனதன ...... தனதான |
பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு ...... மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட ...... அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு ...... சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு ...... மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி ...... லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல ...... பெருமாளே. |
பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும் அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே, சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை* காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக. ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர வருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக, வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே.
* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி, ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 228 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மீது, காகத்தின், ஸ்ரீராமர், காகம், பெருமாளே, அருளிய