பாடல் 229 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனன தான தத்த தனன தான தத்த தனன தான தத்த ...... தனதான |
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் ...... மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து ...... விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப ...... தொருநாளே அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து ...... மயில்வீரா அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க வினவ வோது வித்த ...... பெருமாளே. |
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 229 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, பெருமாளே, மீதும், சிவபெருமான், கேட்க, கற்க, முறிய, வலிய, இளமை, பிறவி, கெட்டு, அமுத