பாடல் 227 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதான தத்ததன தனதான தத்த தனதான தத்ததன ...... தனதான |
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு ...... கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள் வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும் விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல் வடமேரெ னத்தரையில் ...... விழவேதான் வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு மருகாக டப்பமல ...... ரணிமார்பா சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ் செவியார வைத்தருளு ...... முருகோனே சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள் திருவேர கத்தில்வரு ...... பெருமாளே. |
பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே, பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி, இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள். விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ? (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே, தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே, சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே, சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 227 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, உடல், தத்ததன, பெருமாளே