பாடல் 224 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதன தான தந்த தனதன தான தந்த தனதன தான தந்த ...... தனதான |
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து கனியித ழேய ருந்தி ...... யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய் உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும் உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே. |
நிலவில் இருந்து எடுத்தது போன்று வகைவகையான மலர்களைத் தெரிந்து எடுத்து நிறைந்துள்ள கூந்தலின் மேல் அணிந்து, காதின் குண்டலங்கள் அளவும் பாய்கின்ற, உவமை இல்லாத வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க, மொழிகள் இன்னது பேசுகின்றோம் என்ற நினைவே இல்லாமல் பேச, மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்ட கலகலப்பான லீலைகள் கணக்கில்லாமல் செய்து, கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, காமப் பற்று மிக்க புணர்ச்சியிலே ஈடுபட்டுப் பொருந்தி, விலைமாதர்களிடத்தே மயக்கம் உறும் கபடனாகிய என்னை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்து அருளுக. ஏழு உலகமும், தேவர் உலகமும், சிவ பெருமான் தங்கும் உயர்ந்த கயிலாயமும், பொன் மலையாகிய மேருவும், உயிர்களும், ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாக ஒரு முதற் பொருளாகி நின்ற பார்வதியின் திருவருளால் வளர்ந்த குமரேசனே, பதறிய சூரனுடைய உடல் அழியும்படி வேலைச் செலுத்திய குமரனே, மிக்க கடிய பலம் வாய்ந்த மயில் மீது வாழ்பவனே, மலைச் சிகரமாய் விளங்கி மேகம் தங்கும் இடம் போல் உயர்ந்த சுவாமி மலையின் மீது அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 224 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்த, தங்கும், மீது, உலகமும், உயர்ந்த, பெருமாளே, ரிந்து, நின்ற, மிக்க