பாடல் 223 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - யதுகுல காம்போதி; தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த ...... தனதான |
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று ...... வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த ...... நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த ...... குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி ...... மணவாளா காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே. |
நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும் பாதத் தாமரைகளையே நினைத்து, (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த 24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும், நீ வேறு என்றில்லாமல் நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில், நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி, பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில்*** பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக. நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர, சிறந்த ஞான உபதேசத்தை செம்மையாகவே சொன்ன குருநாதனே, பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும் சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே, கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி, காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.
* 28 சிவாகமங்கள் பின்வருமாறு: காமிகம், யோசகம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம், விஷயம், நிச்வாசம், ஸ்வயாம்புவம், ஆக்னேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதூளம்
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
*** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 223 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், ஞானம், மார்க்கம், பெற்ற, தானான, தத்த, பெரிய, வேறு, பின்வருமாறு, என்றில்லாமல், ஆதாரங்களின், உரிய, பெயர்களும், தொழில், நான், இடுதல், யோகம், னாதி, ருக்க, ரைத்த, முத்தி, ணத்த, காவேரி, வாமி, தகிட, கிரியை, சரியை, பெருமாளே, உள்ள