பாடல் 220 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல் மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய் உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல் உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப முதவியெனை யாள அன்பு ...... தருவாயே குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள் குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக் குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே. |
இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, வண்டு விடு தூது (*1), தண்டகம் (*2) முதலான, இனிமையான கவி மாலைகள், சிந்து (*3), கலித்துறைகள் (*4), ஏசல் (*5), இன்பமான தரு (*6) முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி (காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(* 1) வண்டைத் தூதாக அனுப்பித் தன் காதலைத் தெரிவிக்க, தலைவன் தலைவிக்கு செய்தி அனுப்பும் சிற்றிலக்கிய நூல் வகை. அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல் ஆகியவையும் தூதுக்கு உரியவை.
(* 2) தண்டகம் - தோத்திரமான வடமொழிச் செய்யுள். (உதாரணம் - கவி காளிதாசர் இயற்றிய சியாமளா தண்டகம்).
(* 3) சிந்து - இசைப்பா வகை. (உதாரணம் - காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து).
(* 4) கலித்துறை - கவிதை வகைகளில் ஒன்று, வரிக்கு 16/17 எழுத்துக்கள் கொண்டது. (உதாரணம் - கட்டளைக் கலித்துறை).
(* 5) ஏசல் - நிந்தா ஸ்துதியில் சிலேடையோடு இருபொருள்படும்படி தலைவனை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடும் கவிதை. (உதாரணத்துக்கு காளமேகப் புலவரின் பல பாடல்கள்).
(* 6) தரு - இசைப் பாட்டு வகை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 220 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிந்து, தண்டகம், உதாரணம், தனதனன, தந்த, விரும்பித், ஏசல், நான், கவிதை, கலித்துறை, பெருமாளே, வந்து, நாரை, தூது, வண்டு, மென்று, முதலான, ரிந்து, வாளை, அன்பு, வெந்து, கண்டு