பாடல் 221 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ஆனந்த பைரவி;
தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14
எடுப்பு /40/4/4
எடுப்பு /40/4/4
தனதன தனனா தனனா தனந்த தத்தம் ...... தனதான |
தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் ...... வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் ...... மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் ...... கணையாலே புளகித முலையா ளலையா மனஞ்ச லித்தும் ...... விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் ...... வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே யுகந்து நிற்கும் ...... முருகோனே அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் ...... புலவோனே அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் ...... பெருமாளே. |
தெருக்களில் உல்லாசமாக நடக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து வம்பு பேசும் வசை மொழிகளாலும், சூரியனுக்கு ஒப்பான ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலில் சிவந்த நிறத்துடன் உதிக்கும் சந்திரனாலும், காமப் போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து, சளைக்காமல் மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும், விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ? மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும், தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே, பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே, அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா, இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களின் காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 221 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மன்மதன், பெருமாளே, தனனா