பாடல் 209 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - கமாஸ், தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த ...... தனதான |
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண் முடியான துற்று கந்து ...... பணிவோனே வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த ணருளே தழைத்து கந்து ...... வரவேணும் செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே. |
வாசனை மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப் பொழிவதுமான சிறப்பான கடப்ப மலரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை, பெருமைவாய்ந்த மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள கருணாகரனே, கடுமையும் ஒளியும் கொண்ட வேலை உடையவனே, அழகு நிறைந்த குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும் உனது குளிர்ந்த முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே, வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள் இயற்றவல்ல நக்கீரனுக்கு விருப்பமுடன் உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து, அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப* என்ற அடி எடுத்துக் கொடுத்து, உன் அருள் வாக்கால் மகிழ்ந்து கூறிய பெரியவனே, யான் சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும் குளிர்ந்த உன் திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும். பாவம் நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும் இந்த வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ? திறம் வாய்ந்த மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற திருவேரகமாம் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* நக்கீரருக்கு திருமுருகாற்றுப்படை நூலை இயற்றுமுன்பு, முருகன் 'உலகம் உவப்ப' என்ற முதலடியை எடுத்துக் கொடுத்தான். இங்கு சந்தத்துக்காக 'உலகாம்' என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 209 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கந்து, தனத்த, தந்த, தனனா, வாய்ந்த, குளிர்ந்த, உலகம், யான், நிறைந்த, எடுத்துக், ணங்க, நித்த, கடப்ப, லக்க, தகிட, பெருமாளே, மீது